ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு; மொத்தம் 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி…

ஆர்.கே.நகர் தொகுதி இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில், 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே. நகர் தொகுதியில் வருகிற 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. கடந்த மாதம் 27ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 4ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில் மொத்தம் 131 பேர், 145 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில் 72 பேர் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, நடிகர் விஷால் உள்ளிட்ட 73 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மேலும் 13 பேர் வேட்பு மனுக்கள் திரும்ப பெறப்பட்டன. இந்நிலையில் மீதமுள்ள 59 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து அவர்களுக்கு சின்னம் வழங்கும் பணி நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கியது. அதில் அதிமுக- வின் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் அதிகாரி ஒதுக்கினார். இதை அடுத்து தொப்பி சின்னத்தை கேட்டு சுயேச்சை வேட்பாளர் டி.டி.வி.தினகரன் உள்பட 29 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். எனவே குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், கொங்கு நாடு மக்கள் கட்சியை சேர்ந்த ரமேஷ் என்பவருக்கு தொப்பி சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து டிடிவி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதே போன்று அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி.தினகரன், வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்றும் தாம் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற போவதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *