ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் தேர்தல் அதிகாரிகள்; தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நடிகர் விஷால் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். தேர்தல் ஆணைய விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக காணப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வேலுசாமி தெரிவித்துள்ளார். இதைதொடர்ந்து, ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்துக்கு விரைந்து சென்ற நடிகர் விஷால், தம்மை ஆதரித்து முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டதற்கான ஆடியோ ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும், தமது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதில் நியாயமில்லை என்றும் தேர்தல் அதிகாரியிடம் தெரிவித்தார்.

இதனை தேர்தல் அதிகாரி வேலுசாமி ஏற்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதை தொடர்ந்து தேர்தல் அலுவலகம் அருகே தமது ஆதரவாளர்களுடன் நடிகர் விசால் தண்டையார் பேட்டை சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்து சென்ற காவல்துறையினர் விஷாலை தேர்தல் அலுவலகம் அழைத்து சென்றனர்.

பின்னர் தேர்தல் அதிகாரியிடம், முன்மொழிந்தவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் ஆடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார். மிரட்டலுக்கு உள்ளானதாக கூறப்படும் வேலு என்பவரிடம் விஷால் பேசிய ஆடியோ ஆதாரத்தை காண்பித்த நடிகர் விஷால், தமக்காக முன்மொழிந்தவர்களை மதுசூதனன் தரப்பினர் மிரட்டியதாகவும், வாபஸ் பெற கையெழுத்து பெறப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். இதனையடுத்து இந்த ஆடியோ ஆதாரத்தை ஆய்வு செய்த ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அதிகாரி சில திருத்தங்கள் செய்த பின்னர் விஷாலின் வேட்பு மனு பரிசீலனையில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக கூறப்படும் பத்து பெயர்களில் சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர் அவரை முன்மொழியவில்லை என்றும், வேட்புமனுவில் இருப்பது தங்களது கையெழுத்து இல்லை என்றும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து தேவையான முன்மொழிவோர் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டார். டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் நடத்திய தீவிர ஆலோசனைக்கு பின்னரே விஷாலின் வேட்புமனு நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த முடியாது எனவும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து சென்னை அண்ணாநகரில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விசால், ஆர்.கே.நகரில் சுயேச்சையாக நிற்கும் இளைஞருக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெறச் செய்வேன் என்று கூறினார்.

இதுக்குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை மீண்டும் ரத்துசெய்வதற்கு சதி நடக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளதாக தெரிவித்தார். நடிகர் விஷாலின் வேட்புமனு விஷயத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆர்கே நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும் என்று கூறிய எழுச்சி தமிழர் தொல்.திருமாவளவன், அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்தினார்.

நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்த இருவர் அதற்கான மனுவில் இருப்பது தங்களது கையொப்பம் அல்ல என்று கூறியதன் அடிப்படையில் வேட்பு மனுவை நிராகரித்ததாக முதலில் கூறப்பட்டது, என்றும் அவர்கள் மிரட்டப்பட்டதாகக் கூறி அதற்கு ஆதாரமாக ஒரு ஆடியோ டேப்பை விஷால் வெளியிட்டு பின்னர் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார் என்றும் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பின்னர் அவரது மனு ஏற்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான நிலையில் தற்போது அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளது தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் சீர்குலைப்பதாக உள்ளது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார். உடனடியாக இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடவேண்டும் என்றும் ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றி வேறு ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் அவர் கட்ச் சார்பில் வலியுறுத்தினார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவு 36 (2) (c) ல் வேட்பாளரின் கையொப்பமோ அவரை முன்மொழிந்தவரின் கையொப்பமோ போலியாக இருந்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது என்ற போதிலும் நிராகரிப்பதற்கு முன் அது போலி என்பதை சட்டரீதியாக அவர் உறுதிப்படுத்தவேண்டும் என்று தெரிவித்த எழுச்சி தமிழர், தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவை வேட்பாளரிடம் கூறி அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வேட்பாளர் தனது தரப்பை நிரூபிக்க ஒருநாள் அவகாசம் தரவேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 36 (5) ல் கூறப்பட்டுள்ளது என்றும் அறிவுறுத்தினார். மேலும் எந்த வாய்ப்பும் தராமல் உடனடியாக முடிவை அறிவித்ததன்மூலம் அந்த சட்டப் பிரிவை தேர்தல் நடத்தும் அதிகாரி மீறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது என்றும் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேட்பாளருக்கு உதவுவதைத்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கடமையாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறதே தவிர அவரது வேட்புமனுவை எப்படியெல்லாம் நிராகரிப்பது என்று பார்ப்பதை அல்ல என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். நடிகர் விஷாலின் வேட்பு மனுவை நிராகரிப்பதற்கு சொன்ன காரணத்தை நாளை எந்தவொரு வேட்பாளருக்கும் சொல்ல முடியும் என்று குறிப்பிட்ட எழுச்சி தமிழர், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர் தரப்பு வேட்பாளரை யார் முன்மொழிகிறார்களோ அவர்களை மிரட்டி அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச்செய்துவிட முடியும் என்ற மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக இது அமைந்துவிடும் என்றும் கூறினார். மேலும் இதன் மூலம் தேர்தல் முறையையே நாசமாக்கிவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

நடிகர் விஷாலின் மனு மீது முடிவெடுப்பதற்கு முன்னர் அவர் கூறியுள்ள புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்திய தொல்.திருமாவளவன், யாராவது வேட்பாளரது தூண்டுதலின் மூலம் தான் விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் எனத் தெரிந்தால் அதற்குக் காரணமானவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கும் தற்போதுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி, ஆர்கே நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவரை மாற்றவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொ.திருமாவளவன் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *