ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் ; ஆந்திராவில் நடைபெற்ற மாநில சுயாட்சி மாநாட்டில் எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்….

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் டவுன் ஹாலில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெற்றது. எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் மது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் ராமகிருஷ்ணா, மக்கள் விடுதலை பாடகர் கத்தர், எஸ்டிபிஐ கட்சியின் ஆந்திர மாநில செயலாளர் அப்துல் வாரீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் உரையாற்றிய எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், 21-ம் நூற்றாண்டின் புதிய ஹிட்லராக பிரதமர் மோடி செயல்பட்டு வருவதாகவும், மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் விளிம்பு நிலை மக்களின் உரிமைகள் பறிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்.

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க இடதுசாரிகளுடன் கைகோர்த்துள்ளதாக தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன், மாநில அரசிடம் அதிகாரம் இருந்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்பதற்காகவே மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுவதாக கூறினார்.

கேரள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டது போல், ஆந்திரா, தெலுங்கானா மாநில கோயில்களிலும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

முன்னதாக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வந்த எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனுக்கு ஆந்திர மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *