ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களைகட்டியது புத்தாண்டு; நாடு முழுவதும் பொதுமக்கள் உற்சாக கொண்டாட்டம்

நள்ளிரவில் மலர்ந்தது 2018 ம் ஆண்டு. நாடு முழுவதும் புத்தாண்டு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் களை கட்டியது.

சென்னையில் மெரீனா கடற்கரை, பெசண்ட் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புத்தாண்டை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது. ஓரிடத்தில் ஒன்று திரண்ட பொதுமக்கள் கேக் வெட்டி, ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.

பல்வேறு இடங்களில் கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தியது. நட்சத்திர விடுதிகளில் குவிந்த மக்கள் ஹாப்பி நியூ இயர் என்ற முழக்கங்களுடன் புத்தாண்டை வரவேற்றனர். பொதுமக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களைச் சொல்லி தங்களது மகிழ்ச்சியையும் பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டையொட்டி சென்னை முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா போன்ற நகரங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது. புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. சென்னை சாந்தோம் தேவாயலயத்தில் நடைபெற்ற கூட்டு பிரார்த்தனையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருத்தணி முருகன் கோவிலிலும் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதேபோல் சென்னை வேளச்சேரியில் உள்ள தாய்மண் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் புத்தாண்டை வரவேற்றார். மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தின் ஹாங்காங்கிலும், ஆஸ்திரேலியாவின் சிட்னியிலும் வசிக்கும் மக்கள் 2018ம் ஆண்டு புத்தாண்டை வாண வேடிக்கையுடன் உற்சாகமாக வரவேற்றனர்.. இந்திய நேரப்படி டிசம்பர் 31-ம் தேதி மாலை 3.30 மணிக்கு உலகிலேயே முதன் முறையாக பசிஃபிக் கடல் பகுதியில் உள்ள சமோவா தீவில் புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்தில் உள்ள ஹாங்காங்கில் இந்திய நேரப்படி ஞாயிறன்று மாலை 4.30 மணிக்கு உற்சாகமாக புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அந்நாட்டு மக்கள் வண்ண விளக்குகள் மிளிர, வாண வேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

புத்தாண்டையொட்டி சென்னையில் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேக பயணத்தில் சென்ற போது ஏற்பட்ட விபத்துகளில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.

நாடு முழுவதும் நேற்று இரவு 11 மணி முதலே புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது. புத்தாண்டையொட்டி இளைஞர்கள் ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் பொதுமக்களுக்கு அச்சமூட்டும் வகையில் அதிவேக பயணத்தில் சென்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டு பயணிப்பது, பைக்கின் ஸ்டாண்ட் சாலையில் பட்டு நெருப்பு தெறிக்கும் வகையில் செல்வது, என ஆபத்தான நிலையில் இளைஞர்கள் பயணம் செய்தனர். இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற விபத்துகளில் ஏராளமான இளைஞர்கள் படுகாயமடைந்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்தார்.

இதனைதொடர்ந்து நந்தனம் பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் அழைப்புக்கான கட்டுப்பாடு அறையையும் அமைச்சர் விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *