ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் பகல் கனவு பலிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேச்சு ; துரோகங்கள் வென்றதாக சரித்திரம் இல்லை என டிடிவி தினகரன் பதிலடி

ஆட்சி கலையும் என பகல்கனவு காணுபவர்களின் எண்ணம் பலிக்காது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் பாலையூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்துக்கு ஜெயலலிதா பெயர் சூட்டியுள்ளதாகவும், தரங்கம்பாடியில் 170 கோடி ரூபாய் மதிப்பில் நவீன மீன்பிடித் துறைமுகமும், வெள்ளபள்ளத்தில் 152 கோடி ரூபாய் மதிப்பில் துறைமுகமும் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும், ஆட்சியைக் கலைக்க சிலர்கட்டும் மனக்கோட்டை, மணல் கோட்டையாகும் என தெரிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய ஆட்சி மீது கல்லெறிவதென்பது மக்களின் மீது கல்லெறிவதற்கு சமம் என்றார். சூழ்ச்சி, வஞ்சகத்துக்கு அதிமுக தொண்டர்கள் துணை போக மாட்டார்கள் என்றும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இந்நிலையில், திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், துரோகத்தை போக்க எந்த புண்ணிய நதியில் மூழ்கினாலும் எடப்பாடி பழனிசாமி செய்த பாவம் போகாது என்றார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றம் என்று ஒன்று இருப்பதை மறந்து செயல்படுவதாக கூறிய தினகரன், நீதிமன்றத்தில் நிச்சயம் நீதி வெல்லும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *