சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ; ஜாக்டோ ஜியோ தொடர்ந்த வழக்கில் விளக்கம் அளிப்பார் என தகவல்

தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ போராட்டம் குறித்து, தலைமை செயலாளர் இன்று ஆஜராக உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், சென்னையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதால் அவர் நீதிமன்றம் வருவாரா என அந்த அமைப்பினர் குழப்பத்தில் உள்ளனர்.

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 7-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டதன் அடிப்படையில் விசாரணை நடத்திய நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு ஒரு மணிநேரம் அவகாசம் அளித்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டது. மேலும், இன்று தலைமை செயலாளர் ஆஜராக வேண்டும் என்றும் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இதையடுத்து பணிக்கு திரும்பிய ஜாக்டோ ஜியோ உறுப்பினர்கள், இன்று தலைமை செயலாளர் ஆஜராவார் என எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்காக ஜூலை 2-ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பெற்ற பெற்றவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கும் விழா கல்வித்துறை சார்பில் இன்று சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா கலையரங்கத்தில் நடக்கவுள்ளது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தலைமை செயலாளர் நீதிமன்றத்தில் ஆஜராவாரா? என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *