அவுட்சோர்சிங் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும்; திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

அ.தி.மு.க. அரசு அவுட்சோர்சிங் மோசடிகளில் ஈடுபடுவதாக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இலட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து விட்டு வேலை வாய்ப்பின்றி விரக்தி மற்றும் மனவேதனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். வேலை வாய்ப்பு அலுவலங்களில் 85 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள நிலையில் தமிழக அரசுத் துறைகளில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் அவுட்சோர்சிங் முறையில் தனியார் ஏஜன்சிகள் மூலம் வெளிப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மாதம் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள், 7 ஆயிரம் ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே அவர்களுக்கு சம்பளமாகவோ, கூலியாகவோ கொடுத்து மீதியை சுரண்டுவதாக புகார் கூறியுள்ளார். அவுட்சோர்சிங் முறையை கைவிட்டு, சட்ட விதிகளின்படி பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், அவுட்சோர்சிங் முறைகேடுகள் குறித்த விசாரணைக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *