அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அரசு மீது எதிர்க்கட்சிகள் புகார் : முதலமைச்சர் பழனிசாமி

அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே, ஆளும் அதிமுக அரசின் மீது, எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.

சேலம் செல்லும் வழியில், கோயம்புத்தூர் வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, விமான நிலைய வளாகத்தில், மேள தாளங்கள் முழங்க, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்…

செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் நடைபெறும் வருமானவரிச் சோதனைக்கும், ஆளும் அதிமுக அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றார்.

தற்போது, டெண்டர்கள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே கோரப்படுவதாகவும், அவை திறக்கப்படும்போது தான், யார்? என்ன தொகைக்கு ஒப்பந்தம் கோரியிருக்கிறார்கள் என தெரியவரும் என்றார். எனவே, டெண்டர் கோருவதில், எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

முட்டை கொள்முதலில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு, அடிப்படை ஆதாரமற்றது என முதலமைச்சர் விளக்கமளித்திருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 31 கோடி ரூபாய்க்கு மட்டுமே, ஒப்பந்தம் கோரப்பட்டு, முட்டை கொள்முதல் நடைபெற்றிருப்பதாகவும்,
அதைவிட இரண்டு மடங்கு அளவிற்கு ஊழல் என்று பொய்யாக குற்றம் சாட்டப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஆளும் அதிமுக அரசின் மக்கள் நல பணிகளையும், சாதனைகளையும் பொறுக்க முடியாமலேயே, எதிர்க்கட்சிகள், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார். மு.க.ஸ்டாலின் லண்டன் சென்றது முதல், அவர், நாடு திரும்பும்வரை நல்ல மழை பெய்து, அணைகள் நிரம்பியதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிலேடையாக குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *