அரசியலில் களமிறங்குவதாக நடிகர் ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு; 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்று நடிகர் ரஜினி அறிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் 6-வது நாளாக, நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். இதையடுத்து பேசிய அவர் தான் அரசியலுக்கு வருவது உறுதி என அறிவித்தார். தனிக்கட்சி ஆரம்பித்து 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் செயல் திட்டங்களை நிறைவேற்றாவிட்டால், பதவியை ராஜினாமா செய்வோம் எனவும் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். உள்ளாட்சித் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக இருப்பதால், அதில் போட்டியிடப் போவதில்லை என கூறிய ரஜினிகாந்த், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து அந்த நேரத்தில் தெரிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயகம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் கட்சிகள், சொந்த மக்களையே கொள்ளையடிப்பதாக ரஜினிகாந்த் வேதனை தெரிவித்துள்ளார்.

நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பதுதான் தமது கொள்கை என்றும், ஜனநாயக போரில் தமது படையும் இனி இருக்கும் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள், கருத்துகள் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் அதிமுகவை யாரும் வெல்லப்போவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ரஜினிகாந்தின் முடிவு அவரது சொந்த விருப்பம் என்றும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வந்து பொதுமக்களுக்கு சேவை செய்யலாம் என கூறினார்.

ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் திமுக கவலைப்படாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகை தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், நடிகர் ரஜினிகாந்த் 25 சதவீதம் அளவுக்கே அரசியலுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார்.

ரஜினி அரசியலுக்கு வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வர முடியும் என்றும் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். .

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது எனவும் அவர் தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது தொடர்பாக, நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், சகோதரர் ரஜினியின் சமூக உணர்வுக்கும் அரசியல் வருகைக்கும் வாழ்த்துக்கள்., வருக வருக. என பதிவிட்டுள்ளார்.

நடிகர் ரஜினியின் வருகைக்கு கவிஞர் வைரமுத்துவும் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதே போன்று பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் அமைப்புகளின் தலைவர்களும் நடிகர் ரஜினியின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *