தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சேலம், கிருஷ்ணகிரி, கோவை மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை இடி மின்னல் காற்றுடன் கன மழை பெய்துள்ளது. iதே போன்று ஏற்காடு சுற்றுலாத் தலத்தில் பெய்த மழையால் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நேற்று கனமழை பெய்தது. புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசனூர் மலைப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை கொட்டியது.இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதே போன்று கோயமுத்தூர் காந்திபுரம், துடியலூர், கவுண்டம்பாளையம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது.

வெப்பம் தணிந்ததாலும் குளிர்ச்சியான சூழலாலும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நேற்று ஒருமணி நேரத்திற்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் ஓடியது. குளத்துக்காடு, எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு,சாணார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்தது.  இதனிடையே, தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராயலசீமா முதல் குமரிக் கடல் வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வு நிலையாலும் வெப்பச்சலனம் காரணமாகவும் மழை பெய்யக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள் தமிழகத்தில் வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *