போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து வந்த புல்லட் நாகராஜன் கைது

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரை மிரட்டிய புல்லட் நாகராஜனை, பெரியகுளம் தென்கரையில் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த மேல்மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். கடந்த 15 ஆண்டுகளாக புல்லட்டில் சென்று நகைப்பறிப்பில் ஈடுபடும் புல்லட் நாகராஜன் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 2003-ஆம் ஆண்டு பெரியகுளம் வடக்கு அக்ரகாரத்தில் உள்ள வங்கி ஒன்றில் காசாளாரிடம் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி 10 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் புல்லட் நாகராஜன் ஈடுபட்டதாக கூறப்பட்டாலும் அதனை போலீசாரால் இன்னும் நிரூபிக்க இயலவிலை. மேலும் பெரியகுளத்தை அடுத்த தேவதானப்பட்டியில் ஆட்டுக்கிடையை திறந்து 100 ஆடுகளை திருடி சென்றது உள்ளிட்ட வழக்குகளும் இவர் மீது உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன் பெரியகுளம் நீதிமன்றத்திற்கு வாய்தாவிற்கு வந்தபோது உடன் வந்த போலீசாரிடம் புல்லட் நாகராஜன் சாமர்த்தியமாகப் பேசி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாகவும், வீட்டுத் திண்ணையில் போலீசாரை அமர வைத்துவைட்டு பின்வாசல் வழியாக தப்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இது போன்று பலமுறை புல்லட் நாகராஜன் தப்பியோடியதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், பெரியகுளத்தை அடுத்த தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா உள்ளிட்டோருக்கு கொலை மிரட்டல் விடுத்து நாகராஜன் பேசிய ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. புல்லட் நாகராஜனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் புல்லட் நாகராஜன்  தென்கரையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தேனி ஏ.டி.எஸ்.பி. சுருளிராஜன், பெரியகுளம் டி.எஸ்.பி. ஆறுமுகம், தென்கரை காவல் ஆய்வாளர் மதனகலா உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை போலீசார் அங்கு சென்ற போது பைக்கில் சென்றுகொண்டிருந்த நாகராஜனை விரட்டிச் சென்றனர். அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் போலீசாரைத் தாக்க முயற்சி செய்த புல்லட் நாகராஜனை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தற்போது தென்கரை காவல் நிலையத்தில் புல்லட் நாகராஜனிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே கைது செய்யப்பட்ட புல்லட் நாகராஜனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பையில் 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலியாக தயாரிக்கப்பட்ட நீதிமன்ற முத்திரை, நீதிபதி உடை, வழக்கறிஞர் உடை, ‘புல்லட் நாகராஜன், சப் ஜட்ஜ்’ என எழுதப்பட்ட பெயர்ப் பலகை, 2 கைத்துப்பாக்கிகள், 2 கத்திகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *