சாலை வசதியில்லாததால் பள்ளிப் படிப்பை தொடரமுடியாமல் தவிக்கும் மாணவர்கள்

சாலை வசதியில்லாததால் பள்ளிப் படிப்பை தொடரமுடியாமல் தவிக்கும் மாணவர்கள்

உடல்நலம் பாதிப்பு, குடும்ப வறுமை உள்ளிட்ட காரணங்களுக்காக மாணவர்கள் பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுவதை அறிந்திருப்போம். ஆனால், சாலை வசதி இல்லாததால் மாணவ- மாணவிகளின் பள்ளிப் படிப்பு தடைபடும் அவலம் விழுப்புரத்தில் இருந்து வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் துரூர் கிராமம் அமைந்துள்ளது.  500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் இந்த கிராமத்தில் சாலை வசதியே இல்லை. தேவையான இடங்களுக்கு அவர்களின் கால்கள் போகும் திசையே இதுவரை பாதையாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கிராமத்தில் 5ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளி மட்டுமே இருப்பதால், மேற்கொண்டு படிக்க 10 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதால், மாணவர்களின் கல்வி 5ம் வகுப்போடு தடைபட்டு விடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சாலை வசதிகள் இல்லாததால் கர்ப்பிணிகள், முதியவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதிலும் சிக்கல்கள் இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். துரூர் கிராமத்திற்கு வருவதற்கு அரசு அதிகாரிகளும் தயக்கம் காட்டுவதாகவும், 10 கிலோ மீட்டருக்கு நடை பயணம் மேற்கொள்வது அரசு அதிகாரிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

விளை பொருட்களை உரிய நேரத்தில் சந்தைபடுத்துவதிலும் தாமதம் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். கால மாற்றத்திற்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு, துரூர் மலை கிராமத்திற்கும்  சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *