சென்னை மற்றும் புறநகர் பகுதி குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி ; மழை நீரை உடனடியாக அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி பகுதியில் கனமழை காரணமாக, நந்திவரம், கூடுவாஞ்சேரி ஏரிகள் நிரம்பி, உபரி நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் கடந்த ஒருவாரமாக பெய்து வரும் மழையால், ஓட்டேரி சுப்பராயன் 4வது தெருவில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளது. தரைதளத்தில் இருந்த வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், அங்கிருந்தவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட நேதாஜி நகர், வெற்றி நகர், கலைஞர் நகர், துர்கா தேவி நகர், உள்ளிட்ட இடங்களில் சாலையை மழைநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் வீட்டிற்குள்ளும் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்ததால், அங்கு வசிப்போர் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர். மழை நீர் அகற்றும் பணியை அமைச்சர் பாண்டியராஜன் பார்வையிட்டு, பணிகளை துரிதப்படுத்தினார்.

மழை வெள்ளம் காரணமாக சென்னையின் புறநகரில் முடிச்சூர் அருகே உள்ள ஆதனூர், ஏவிஎம் நகர், வரதராஜபுரம், மாதா நகர் இணைப்புச் சாலை மற்றும் திருமுருகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மழை வெள்ளத்தால் கடந்த 3 நாட்களாக இப்பகுதி தனித்து விடப்பட்ட தீவாக காட்சியளிக்கிறது. சென்னை பள்ளிக்கரணையில் கழிவுநீருடன் கலந்த ஏரி நீர், நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த செம்பாக்கம், சிட்லபாக்கம் ஏரிகள் நிரம்பி குடியிருப்புக்குள் புகுந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மழை நீர் செல்லும் வடிகால் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதிக அளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *