மும்பை தாக்குதலுக்கு திட்டமிட்டவர்கள் குறித்து தகவல் அளித்தால் 35 கோடி ரூபாய் வெகுமதி – அமெரிக்கா அறிவிப்பு

மும்பை தாக்குதல் சதிகாரர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு 35 கோடி ரூபாய் பரிசுப் பணம் வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

2008ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மும்பை தாக்குதலின் 10ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை தாக்குதல் நடத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், அதற்கு திட்டமிட்ட சதிகாரர்கள் இன்னும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இது, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் செயல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அட்டூழியத்தை செய்த லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு எதிராக அனைத்து நாடுகளும், குறிப்பாக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மைக் பாம்பியோ வலியுறுத்தியுள்ளார். மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட 6 அமெரிக்கர்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட அனைவரது குடும்பங்கள் பக்கம் அமெரிக்கா நிற்பதாகவும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறையின், நீதிக்கான வெகுமதிகள் திட்டத்தின் கீழ், மும்பை தாக்குதல் சதிகாரர்கள் குறித்து தகவல் அளிப்போருக்கு 35 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு சதி செய்த, அதில் ஈடுபட்ட மற்றும் தாக்குதலுக்கு உதவியவர்களை உலகின் எந்த மூலையிலும் கைது செய்யவோ அல்லது சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு உதவும் வகையிலோ தகவல் அளிப்போருக்கு 35 கோடி ரூபாய் சன்மானமாக அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் தலைவர்களான ஹபீஸ் சயீத்  மற்றும் ஹபீஸ் அப்துல் ரஹ்மான் மக்கி  ஆகியோரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதற்கு தேவையான தகவல்களை வழங்கினால் தலா 10 மில்லியன் டாலர்கள் மற்றும் 2 மில்லியன் டாலர்கள் வழங்கப்படும் என ஏற்கெனவே அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *