மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிக்கிறது… முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்

மிகப்பெரிய மாற்றத்திற்கான பாதையில் இந்தியா பயணிப்பதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார். உத்தரக்கண்ட் மாநிலம் டேராடூனில் முதலீட்டாளர் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்திய முதலீட்டாளர்கள் மட்டுமின்றி ஜப்பான், செக் குடியரசு, அர்ஜெண்டினா, மொரிசியஸ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

விரைவான பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான சாட்சியாக இந்தியா இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவை நோக்கி நாம் முன்னேறுவதாக கூறிய மோடி, மிகப்பெரிய மாற்றத்தை நோக்கி இந்தியா செல்வதாகக் குறிப்பிட்டார்.

இனி வரப் போகும் ஆண்டுகளில் உலகின் வளர்ச்சிக்கே உந்து சக்தியாக இந்தியா திகழும் என்று, உலகின் முன்னணி நிறுவனங்கள் கணித்துள்ளதாக பிரதமர் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார். இந்தியாவின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்திருக்கிறது என்றும் மோடி தெரிவித்தார். பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட  பிரதமர், நடுத்தர மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறினார்.

கடந்த இரு ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். சர்வதேச அளவில் தொழில் புரிவதற்கு எளிமையான நாடுகளின் தரவரிசையில் இந்தியா 42 புள்ளிகள் முன்னேறி இருக்கிறது என்றும் பிரதமர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சி அபரிதமான வேகத்துடன் இருப்பதாகவும், கடந்த ஓராண்டில் மட்டும் 10 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அதிகமாக தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *