மத்தியக் குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு திருவாரூர் புறப்பட்டனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேதங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், திருவாரூருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

தமிழகத்தில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் 7பேர் கொண்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு வருகின்றனர். நேற்றுப் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு செய்த மத்தியக் குழுவினர், இன்று காலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

காலையில் ஒரத்தநாடு புதூரில் புயலால் சேதமடைந்த வீடுகளையும் புயலால் சாய்ந்த தென்னைகளையும் பார்வையிட்டனர். சாலை, குடிநீர், மின்சாரம் ஆகிய உட்கட்டமைப்பு வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் ஆய்வு செய்தனர். அப்போது அவர்களிடம் குறைகளைத் தெரிவித்த பொதுமக்கள், புயலில் சேதமடைந்த சொத்துக்களுக்குக் கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

குடிநீரும் உணவும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். மத்தியக் குழுவினர் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புலவன்காடு, நெம்மேலி, ஆலடிக்குமுளை ஆகிய பகுதிகளிலும் வீடுகள் பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய கடற்கரைப் பகுதிகளில் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதம், படகுகள், வலைகள் சேதம் ஆகியவற்றையும் பார்வையிட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தென்னைகள் முற்றிலும் சாய்ந்ததால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இது குறித்து மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். அதன்பின்னர், மத்தியக் குழுவினர் திருவாரூர் மாவட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *