சென்னையில் ஊர்க்காவல் படை வீரர்கள் திடீர் போராட்டம்

தெலுங்கானா மாநிலத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்று சென்னை திரும்பிய ஊர் காவல் படையினர், திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இருந்து 2 ஆயிரத்து 500 ஊர் காவல் படை வீரர்கள் தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்றனர். ஐந்து நாட்கள் பணிக்கு அவர்களுக்கு 2 ஆயிரத்து 800 ரூபாய் ஊக்கப்படி என்று கூறி 80 விழுக்காடு முன் பணம் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளது.  இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர்கள் சென்னை திரும்பினர்.

ராஜரத்தினம் திடலில் திரண்ட அவர்களிடம் உயர் அதிகாரிகள் தற்காலிக அடையாள அட்டையை திருப்பிக் கேட்டுள்ளனர். அதற்கு, பாக்கி ஊக்கப்படியை கொடுக்குமாறு ஊர்க்காவல் படை வீரர்கள் கேட்டுள்ளனர். அப்போது அதிகாரி ஒருவர் தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர். தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், ஊதியத்தை உயர்த்தும் படியும் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் ஊர்க்காவல் படையினர் நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாகவும், 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஊதியம் வழங்கப்படுவதாகவும் அவர்கள் கூறினர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போராட்டத்திற்கு இடையே, அங்கிருந்த ஆயுதப்படைக் காவலருக்கு வலிப்பு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. நாக்கைக் கடித்து விட்டதால் வாயில் இருந்து ரத்தம் வழிந்த நிலையில் அவர் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *