கோவை மற்றும் சேலத்தில், பஸ் போர்ட் எனப்படும் அதிநவீன பேருந்து நிலையங்கள் விரைவில் அமையும்: முதலமைச்சர் பழனிசாமி தகவல்

விபத்துகளை தவிர்க்க விதிகளை மதித்து பொறுப்புணர்வோடு வாகனங்களை இயக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.  கோவை மற்றும் சேலத்தில், பஸ் போர்ட் எனப்படும் அதிநவீன பேருந்து நிலையங்கள் விரைவில் அமைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாலை விபத்துகளால் உயிரிழப்பு, ஊனம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், புதுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் கோவையில் உயிர் அறக்கட்டளை என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விதிகளை மதிக்காமல் நடந்துகொள்வதும் மிதமிஞ்சிய வேகமும் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும் 70 சதவீத விபத்துகளுக்கு காரணம் என புள்ளி விவரங்கள் கூறுவதை சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசு செயல்படுத்தி வரும், அவசர கால இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை, விபத்து மற்றும் அவசர காலங்களில் எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறது, எத்தனை உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன என்பதை அவர் விவரங்களோடு விளக்கிப் பேசினார்.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கனரக வாகனங்கள் புறநகர பகுதி வழியாக செல்லும் வகையில் மேற்கு, கிழக்கு புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மாவட்டத்திற்கு திட்டங்களை வாரி வழங்கியவர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு, அவற்றை பட்டியலிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *