ஓடும் ரயிலில் மூதாட்டி கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில், நகைகளை திருடிச்சென்ற கொலையாளி கைது

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் ஓடும் ரயிலில் மூதாட்டியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டு நகைகளை திருடிச் சென்றவனை, விழுப்புரம் ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்பவர், திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பங்கேற்பதற்காக கடந்த 9ஆம் தேதி பாமினி விரைவு ரயிலில் பயணம் செய்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியில் அவர் மட்டும் இருந்த நிலையில், கழுத்தறுக்கப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தார். 3 கிராம் நகை, 2 செல்போன்கள் மாயமாகி இருந்தன.

இதுகுறித்து விழுப்புரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியின் செல்போன் எண் திடீரென பயன்பாட்டுக்கு வந்ததை அடுத்து, அதன் இருப்பிடம் கண்டறியப்பட்டது. திருவண்ணாமலையில் உள்ள செல்போன் கடை ஒன்றில் அந்த செல்போன் இருந்தது. கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்திய போது, மாலை அணிந்திருந்த நபர் ஒருவர், பழைய செல்போன்களைக் கொடுத்து விட்டு புதிய செல்போன் ஒன்றை வாங்கிச் சென்றதாகக் கூறினார்.

கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் அந்த நபர் அடையாளம் காணப்பட்டார். இந்தக் காட்சிகளை வைத்து விசாரிக்கையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆனந்தன் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை அடுத்து அங்கு சென்ற ரயில்வே போலீசார் ஆனந்தனைக் கைது செய்து விசாரிக்கையில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். மூதாட்டியைக் கொலை செய்து விட்டு அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலின் வேகம் குறைந்ததும் தப்பிச் சென்றதாகவும் ஆனந்தன் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை அடுத்து ஆனந்தன் சிறையில் அடைக்கப்பட்டான். ஆனந்தன் தேநீர் கடை நடத்தி வந்ததாகவும், கடையை அவனது மனைவி கவனித்து வந்ததாகவும் ரயில்வே போலீசார் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *