சென்னையில் ரூ.824 கோடி மோசடி – கனிஷ்க் ஜுவல்லரி மீது சி.பி.ஐயில் புகார்

சென்னையில் இயங்கிய கனிஷ்க் தங்க நகை உற்பத்தி நிறுவனம் மோசடியாக 824 கோடி கடன்பெற்று ஏமாற்றியது தெரியவந்ததால், அதன் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் மீது எஸ்.பி.ஐ. வங்கி தலைமையிலான கூட்டமைப்பு, சி.பி.ஐ.யில் புகார் அளித்துள்ளது.

சென்னையில் இயங்கி வந்த கனிஷ்க் தங்க நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில் கடன் வாங்கியது தெரியவந்துள்ளது. முதன்முறையாக 2008ஆம் ஆண்டில் தமது நிறுவனத்தில் 24 கோடி ரூபாய்க்கு தங்க நகைகள் இருப்பு உள்ளதாகவும், 2007ஆம் ஆண்டு விற்பனை 80 கோடி ரூபாய் என்றும் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் கணக்கு காட்டியுள்ளார். இதை நம்பிய சென்னை ராஜாஜி சாலையில் உள்ள எஸ்.பி.ஐ. வங்கி, 50 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது.

இதன்மூலம் தொழிலை விரிவுபடுத்திய பூபேஷ்குமார் ஜெயின், அடுத்தடுத்த ஆண்டுகளில் மோசடி கணக்குகள் மூலமே, தங்க நகை இருப்பையும், விற்பனையையும் அதிகரித்து காட்டியுள்ளார். கணக்குகளை சரியாக ஆராயாமல், கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் வழங்கும் வரம்பை  எஸ்.பி.ஐ. வங்கி உயர்த்தியுள்ளது. அதன்பிறகு, எஸ்.பி.ஐ. வழங்கிய கடன்களை சுட்டிக்காட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்பட 13 வங்கிகளிலும் கடந்த 2011ஆம் ஆண்டில் 115 கோடி வரை கடன் வாங்கியுள்ளார். இதனால், கனிஷ்க் நிறுவனத்திற்கு கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து, எஸ்.பி.ஐ. தலைமையில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன.

கனிஷ்க் நிறுவனம் வழங்கிய மோசடி கணக்குகளை சரியாக ஆராயமல், எஸ்.பி.ஐ தலைமையிலான வங்கி கூட்டமைப்பு ஒவ்வொரு ஆண்டும், அந்த நிறுவனத்தின் கடன் வரம்பை உயர்த்தியுள்ளது. இதை பயன்படுத்திக் கொண்ட கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், ஐதராபாத், கொச்சின், மும்பை ஆகிய இடங்களில் கிரிஷ் ஜூவல்லரி என்ற பெயரில் நகைக்கடைகளையும் தொடங்கியுள்ளார். ஒரு கட்டத்தில் எஸ்.பி.ஐ. வங்கி கூட்டமைப்புக்கு அளித்த திட்ட அறிக்கையின்படி, அவரது நகைக்கடைகள் இயங்காததால், கனிஷ்க் தங்க நிறுவனத்திற்கான கடன் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 2017ஆம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் கனிஷ்க் தங்க நிறுவனத்திற்கு எஸ்.பி.ஐ. பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 14 வங்கிகள்  மொத்தமாக 824 கோடியே 15 லட்சம் ரூபாயை கடன் கொடுத்துள்ளன. இதனிடையே, கனிஷ்க் நிறுவனத்திற்கு காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே புதுப்பாக்கத்தில் நகை உற்பத்தி ஆலை செயல்பட்டு வந்தது. தயாரித்த நகைகளை கிரிஷ் ஜூவல்லரி மூலம் விற்றதுடன், சென்னையில் உள்ள இதர பிரபல நகை கடைகளுக்கும் விற்றுள்ளனர்.

இதன்மூலம் 20 கோடி ரூபாய் கலால் வரி மோசடி செய்ததாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் கனிஷ்க் கோல்டு நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின் கைது செய்யப்பட்டார். அடுத்த சில வாரங்களில் ஜாமினில் வெளியில் வந்த அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தாங்கள் கொடுத்த கடனுக்கு பல மாதங்களாக வட்டி வராததால் தற்போது சி.பி.ஐ.க்கு எஸ்.பி.ஐ வங்கி தலைமையிலான கூட்டமைப்பு புகார் கடிதம் அனுப்பியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *