கஜினிகாந்த் திரைப்படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் – இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார்

ஆர்யா, சயீஷா நடித்திருக்கும் கஜினிகாந்த் படத்தை குடும்பத்துடன் பார்க்கலாம் என்று இயக்குநர் சந்தோஷ் ஜெயக்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.

இதில் பாடலாசிரியர்கள் கபிலன் வைரமுத்து, கு. கார்த்திக், இசையமைப்பாளர் பாலமுரளி பாலு, இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார், படத்தொகுப்பாளர் ஜி. கே. பிரசன்னா, நடன இயக்குநர் பாபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் பல்லு, நடிகர்கள் ஆடுகளம் நரேன், நடிகை உமா பத்பநாபன், நாயகன் ஆர்யா, நாயகி சயீஷா, நடிகை நிலீமா ராணி, நடிகர் லிங்கேஸ்வரன், விநியோகஸ்தர் சக்திவேலன், தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்,

பாடலாசிரியர் கபிலன் வைரமுத்து பேசுகையில், ‘இசையமைப்பாளர் பாலமுரளி பாலுவுடன் இணைந்து நான் மதியால் வெல் என்ற ‘விமன்ஸ் ஆந்தம் ’ என்ற பாடல் மற்றும் பணமதிப்பிழப்பு குறித்த ஆல்பம் ஒன்றை வெளியிட்டோம். அவருடன் இணைந்து இந்த படத்திலும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். ஆர்யாவின் ரசிகன் நான். அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறேன். தனியார் தொலைகாட்சியில் எங்க வீட்டு மாப்பிள்ளை சீசன்=2 நடத்தினால் அதில் கலந்து கொள்ளவேண்டாம். எங்க வீட்டு மாப்பிள்ளை ஆவதை விட ரசிகர்களின் செல்லபிள்ளையாக நீங்கள் இருப்பதை நாங்கள் விரும்புகிறோம்.’ என்றார்.

விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில்,‘ தென்னிந்தியாவில் அதிக திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி நிறுவனம் ஸ்டூடியோ கிரீன். தாங்கள் தயாரிக்கம் ஒவ்வொரு படங்களும் விநியோகஸ்தர் முதல் அனைத்து தரப்பினருக்கும் லாபம் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் படத்தை தரமாக தயாரித்து வருகிறார்கள். அவர்களின் தயாரிப்பில் அண்மையில் வெளியான ‘கடைக்குட்டி சிங்கம் ’ ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருவதைப் போல் கஜினிகாந்த்தும் வெற்றிப் பெறும். ஏனெனில் கஜினிகாந்த் பேமிலி எண்டர்டெயினர் படம்.’ என்றார்.

நடிகை உமா பத்மநாபன் பேசுகையில்,‘இயக்குநர் சந்தோஷ், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களின் எந்த காட்சியை ரசிக்கிறார்கள் என்பதை உளவியல் ரீதியாக அலசி ஆராய்ந்து கதைகளையும் காட்சிகளையும் உருவாக்கி வருகிறார் என்பதை என்னுடைய சிறிய அனுபவத்தின் மூலம் தெரிந்துகொண்டேன். அதனால் தான் அவர் முதல் இரண்டு படங்களில் என்ன கொடுக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைக் கொடுத்தார். இந்த படத்தில் எதனை ரசிக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதை கொடுத்திருக்கிறார். அதனால் இந்த படம் வெற்றிப் பெறும்.’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *