12 மற்றும் 18 சதவீத GST ஒன்றாக்கப்பட்டு, ஒற்றை வரி விகிதமாக மாற்றப்படும் – அருண் ஜேட்லி

ஜிஎஸ்டி வரி வருவாய் கணிசமான அளவுக்கு உயரும்போது, 12 மற்றும் 18 சதவீத விகிதங்கள் ஒன்றாக்கப்பட்டு, ஒற்றை வரி விகிதமாக மாற்றப்படும் என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வரி முறையின் கீழ், பூஜ்யம், 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 வரி வரம்புகள் உள்ளன. இந்த நிலை மாறி, 99 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி வரம்புக்கு கீழே கொண்டுவரப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து ஜிஎஸ்டி வரி முறையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சமூக வலைதளத்தில் எழுதியுள்ள கட்டுரையில், 97.5 சதவீத பொருட்கள் 18 சதவீதம் அல்லது அதற்கும் குறைந்த வரி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அருண்ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.

வரி வருவாய் குறிப்பிடத்தக்க அளவு உயரும்போது, 12 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரு வரம்புகளுக்கு பதிலாக, ஒற்றை வரி விகிதமாக மாற்றப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். அந்த ஒற்றை வரி விகிதம் என்பது 12 மற்றும் 18 சதவீதங்களுக்கு இடைப்பட்டதாக இருக்கும் என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

ஆயிரத்து 216 பொருட்களில், 183 பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி இல்லை என்றும், 308 பொருட்கள் 5 சதவீத வரி வரம்பில் இருப்பதாகவும், 178 பொருட்கள் 12 சதவீத வரம்பில் இருப்பதாகவும், 517 பொருட்கள் 18 சதவீத வரி வரம்பில் இருப்பதாகவும் அருண்ஜேட்லி தெரிவித்துள்ளார். 28 சதவீதம் என்பது மடிந்து கொண்டிருக்கும் வரி வரம்பு எனக் குறிப்பிட்டுள்ள நிதியமைச்சர், ஆடம்பரப் பொருட்கள் மட்டும் 28 சதவீத வரி வரம்பில் தொடர்ந்து நீடிக்கும் என கூறியுள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *