காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் லாபத்திற்காக மட்டுமே, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் – பிரதமர் மோடி கடும் குற்றச்சாட்டு

காங்கிரஸ் ஆட்சியில் தனிநபர் லாபத்திற்காக மட்டுமே, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சோனியா காந்தி குடும்பத்தினரின் கோட்டையாகக் கருதப்படும் ரேபரேலி தொகுதிக்கு பிரதமர் மோடி தமது முதல் பயணத்தை மேற்கொண்டார். அங்கு நவீன ரயில் பெட்டித் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட தொள்ளாயிரமாவது ஹம்சஃபர் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இந்த தொழிற்சாலையில் இருந்த இயந்திரங்கள் பழுதுநீக்கப்படாமல் இருந்ததாக குற்றம் சாட்டினார். 5 ஆயிரம் பேரை வேலைக்கு எடுப்பதாகக் கூறிவிட்டு, பாதிக்கும் குறைவானவர்களையே பணிக்கு எடுத்ததாகவும் மோடி கூறினார். தற்போது அங்குள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட பின், பணிகள் வேகமெடுக்கத் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் இந்திய ராணுவனத்தினர் மேற்கொண்ட சர்ஜிக்கல் தாக்குதலையே சந்தேகித்ததாகக் குற்றம்சாட்டிய அவர், நமது ராணுவத்தை விட எதிரிகளின் கருத்தை நம்புபவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும் என விமர்சித்தார்.

நாட்டின் படைகளை பலவீனப்படுத்தும் எதிரிகளோடு காங்கிரஸ் கூட்டு சேர்வது போல் தெரிவதாகக் கூறிய அவர், இராணுவத்தினரை அவமதித்த காங்கிரசை இந்திய மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் எனக் குறிப்பிட்டார்.

கார்கில் போரின்போது இந்திய விமானப் படையினரின் பலத்தைக் குறைத்தது காங்கிரஸ் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். போஃபர்ஸ், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு புகார்கள் குறித்து சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, குவாத்ரோச்சி அங்கிலுக்காகவும், கிறிஸ்டியன் மைக்கேல் மாமாவுக்காகவுமே காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாகக் கூறினார். ஆனால், தாங்கள் தேசத்தைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்காகவுமே ஒப்பந்தங்கள் மேற்கொள்வதாகக் கூறினார்.

தனிநபரை விட தேசமே பெரிது என்ற கொள்கை தங்களுடையது என்றும் மோடி குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து பிரயாக்ராஜூக்கு செல்லும் பிரதமர் மோடி அடுத்த ஆண்டு நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைப் பார்வையிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *