ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த 10 கோடி ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு; தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என பெருமிதம்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்த தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்க வாழ் தமிழர்களான ஜானகிராமன், திருஞானசம்பந்தன் ஆகியோர் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தும் முயற்சியாக நிதி திரட்டி வருவதாகவும், அதற்கு தமிழக அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் தமிழை அடிப்படையாகக் கொண்ட இந்தியவியல் ஆய்வுகள், தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாட்டு ஆய்வுகளுக்கு மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும் ஆவணக் காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல் மற்றும் பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகள் உள்ளிட்டவை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழ் மொழியின் வளம் உலகறியச் செய்ய வழிவகை ஏற்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *