வீட்டுமனைகளை வரைமுறைப்படுத்தும் புதிய திட்டத்தை அறிவித்தது தமிழக அரசு ; அனுமதியில்லா நிலங்களை வரைமுறைப்படுத்த கூடுதல் கால அவகாசம்….

அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் காலம் 6 மாதங்களில் இருந்து 1 ஒரு ஆண்டாக அடுத்தாண்டு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாகப் பிரித்து வரன்முறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபடியே வரன்முறை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை OSR-க்காக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். மேலும், சென்னைப் பெருநகரப் பகுதியில் 1975ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் 1972ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரையிலும், மற்ற பகுதிகளில் 1980ம் ஆண்டு ஜனவரி 1 முதல் 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி வரை ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள் அல்லது மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இத்திட்டம் பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வளர்ச்சிக் கட்டணத்தையும் குறைத்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்துடன் கூர்ந்தாய்வுக் கட்டணமாக மனை ஒன்றிற்கு 500 ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் தமிழக அரசின் செய்தித்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *