விளையாட்டு துறையில் தமிழகம் சாதிக்கும்: அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி

தமிழக அரசு விளையாட்டு துறையில் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும் விரைவில் விளையாட்டு துறையில் தமிழகம் பெரியளவில் சாதிக்கும் என அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்துள்ளார். 

ஜூனியர் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறுகிறது. நிகழ்ச்சியின் தொடக்க விழா நேற்று சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஸ்குவாஷ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்வை தொடக்கி வைத்தார்.

இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா உட்பட 28 நாடுகளைச் சேர்ந்த 121 வீரர்,வீராங்கனைகள் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் 28 நாடுகளைச் சேர்ந்த, அந்தந்த நாட்டின் தலையாய வீரர் தேசிய கொடியை கையில் ஏந்தி அணிவகுப்பாக வந்தனர்.

மேலும், இன்று காலை 10 மணிக்கு உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் போட்டி தொடங்குகிறது. இந்தப்போட்டி இன்று தொடங்கி இந்த மாதம் 29ம் தேதி நிறைவடைய உள்ளது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு பின்னர் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், தமிழக அரசு சார்பில் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 50 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமிழக அரசு விளையாட்டு துறைக்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும், விரைவில் விளையாட்டு துறை தமிழகம் சாதிக்கும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 1 வருடத்தில் 148 விளையாட்டுகளில் சிறப்பாக விளக்கியவர்களுக்கு 13.5 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 8.9 கோடி ரூபாய் செலவில் முதலமைச்சர் கோப்பை என்ற பெயரில் தனி நபர் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெறுபவர்களுக்கு முறையே ரூ.1.75 லட்சம் என பரிசுகள் வழங்கபட்டு வருவதாகவும் கூறினார்.

மேலும், கிராமப்புறங்களில் உள்ள வீரர், வீரங்கானைகளை அடையாளம் காணும் வகையில் 12,524 கிராம பஞ்சாயத்துகளில், ரூ.2.55 கோடி ரூபாய் பரிசுகளை உள்ளடக்கிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாகவும், இந்தாண்டுக்கான கிராமப்புற போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும் ஒரு மாதத்தில் அவை நிறைவடையும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் அரசு சார்பில் 18, பெடரேசன்கள் சார்பில் 8 என மொத்தம் 26 ஸ்குவாஷ் மைதானங்கள் உள்ளதாகவும், அரசு பள்ளிகளில் ஸ்குவாஷ் மைதானங்களை அதிகரிக்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *