லஞ்சப் புகாரில் கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் உள்ளிட்ட 3பேர் கைது… லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை;

உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு லஞ்சம் வாங்கியதாக கைதான கோவை பாரதியார் பல்கலைகழக துணைவேந்தர் கணபதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவையில் உள்ள பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு சுரேஷ் என்பவரிடம் 30 லட்சம் ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பல்கலைக்கழகத்திலுள்ள துணை வேந்தரின் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். தொடர்ந்து லஞ்சம் வாங்கிய போது, கணபதி லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் கையும் களவுமாக சிக்கியதாகக் கூறப்படுகிறது. துணை வேந்தர் கணபதி வீட்டில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்றது. மேலும் திருச்சியில் உள்ள அவரது வீடு, அவருடன் தொடர்புடைவயர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். இதனை தொடர்ந்து கணபதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கணபதியின் மனைவி சொர்ணலதா 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை கிழித்து கழிவு நீர் தொட்டியில் விசியதாக கூறப்படுகிறது. இதனால் லஞ்சம் வாங்கியதற்கான தடயங்களை அழிக்க முயன்றதாக சொர்ணலதாவையும், லஞ்சம் பெற்றதற்கு இடைத்தரகராக செயல்பட்ட பேராசிரியர் தர்மராஜையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி, இடைத்தரகர் தர்மராஜ் ஆகியோர் கோவை நீதிமன்ற நீதிபதி ஜான் மீனு முன் ஆஜர்படுத்தப்பட்டனர். இருவரையும் வரும் 16ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து இரண்டு பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *