ரூ.1.20 கோடி சம்பளத்தில் கூகுளில் வேலை பெற்ற 22 வயது மாணவர்

பெங்களூருவை சேர்ந்த 22 வயது மாணவருக்கு கூகுள் நிறுவனத்தின் ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் ஆண்டுக்கு ரூ. 1.20 கோடி சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஆதித்யா பலிவால் என்பவர் பெங்களூரு சர்தேச தகவல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் எம்.டெக். படித்து வந்தார். அவரது கல்லூரியில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற உள்ள நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் ‘கால் லெட்டர்’ (வேலையில் சேருவதற்கான அழைப்பு) ஆதித்யா பலிவாலுக்கு அனுப்பப்பட்டது.

கடந்த ஆண்டு கூகுள் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பப் பிரிவில் புதிய நபர்களை பணியமர்த்துவதற்காக தேர்வு நடத்தியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,000 மாணவர்கள் இதில் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் அடிப்படையில் 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் ஆதித்யாவும் ஒருவர்.

அதேபோல, 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் கணினி மொழி குறியீட்டுக்கான போட்டிகளில் ஒன்றான ஏசிஎம்  இன்டர்நேஷனல் காலேஜியேட் புரோகிராமிங் தேர்வு (ஐசிபிசி) நடைபெற்றது, அதில், 111 நாடுகளை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொண்டனர். அதன் இறுதிப் பட்டியலில் ஆதித்யாவும் இடம்பெற்றார்.

இந்நிலையில், அவருக்கு கூகுள் நிறுவனத்திலிருந்து ஜூலை 16-ஆம் தேதி செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சிப் பிரிவில் பணியில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நியூஸ்18 குழுமத்துக்கு பேட்டியளித்த ஆதித்யா பலிவால், கூகுளிலிருந்து அழைப்பு வந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக தெரிவித்தார். தான் சிறப்பாக செயல்பட தனது ஆசிரியர்கள் அளித்த ஊக்கம்தான் காரணம் என்றார் அவர். மேலும், தனது சீனியர்கள் தனக்கு பெருமளவில் உதவியதாகவும் அவர் தெரிவித்தார்.

கூகுளின் செயற்கை நுண்ணறிவுப் பிரிவில் பணிபுரிவது தனது ஆராய்ச்சிக்கு உதவியாக இருக்கும் எனவும் அங்கு பலவற்றை கற்று கொள்ள விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கார் ஓட்டுவது, சாக்கர் மற்றும் கிரிக்கெட் போன்றவற்றில் தனக்கு ஆர்வம் அதிகம் எனவும் ஆதித்யா பலிவால் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *