மும்பை மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம் ! மூன்று மருத்துவர்கள் கைது

மருத்துவ மாணவி தற்கொலை விவகாரத்தில், அவரை தொடர்ச்சியாக வார்த்தைகளால் இழிவுப்படுத்திய புகாரில் மூன்று மருத்துவர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பையில் உள்ள மருத்துவக் கல்லுரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி பாயல் தத்வி. ஆதிவாசி பழங்குடியின வகுப்பை சேர்ந்த பாயல் தத்வி கல்லூரியில் சேர்ந்ததில் இருந்தே, மூத்த மருத்துவர்கள் அவரை ரேகிங் செய்ததாக தெரிகிறது.

அத்துடன் அவரின் சாதிப் பெயரை குறிப்பிட்டு இழிவுபடுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே தொடர் வார்த்தைகளால் இழிவுபடுத்தப்பட்ட மாணவி பாயல் தத்வி சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

அதேசமயம் மாணவி பாயல் தத்வியை தொடர்ச்சியாக ரேகிங் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்கள் அவரின் தற்கொலைக்கு பின் தலைமறைவாகினர். மூத்த மருத்துவர்களான ஹேமா அஹுஜா, அங்கிட்டா காண்டெல்வால், பக்தி மேக்ஹே ஆகியோர் மகாராஷ்டிரா மருத்துவர்கள் சங்கத்திற்கு ஒரு கடிதத்தை எழுதிவிட்டு தலைமறைவாகினர். அதில், அதிக பணிக்கு ரேகிங் என்று பெயர் வைத்தால் நாங்கள் அனைவரும் ரேகிங்கிற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறோம்  என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மருத்துவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாக பாயல் தத்வி, நோயாளிகள் முன்னிலையில் மூத்த மருத்துவர்களால் அவமரியாதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து பாயல் தத்வி அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார். அதன்பின்னரே அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே பாயல் தத்வியின் கணவர் மற்றும் தாயார் கூறும்போது,  எஸ்டி இடஒதுக்கீட்டு முறையில் பாயல் தத்விக்கு மருத்துவ இடம் கிடைத்ததால் சீனியர்கள் பலரும் அவரை காயப்படுத்தும்படி சேசியுள்ளனர். அத்துடன் அவரின் அறிவுத் திறமை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து பாயல் தத்வி மூத்த அதிகாரிகளிடம் மூன்று முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து குடும்பத்தினர் கூறும்போது, பாயல் தத்வி இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் அவரது கணவர் அவருக்கு நடக்கும் ரேகிங் கொடுமை குறித்து துறை அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். இதனையடுத்து சீனியர்ஸ் பாயல் தத்வியிடம் எதுவும் பேசவில்லை. மூன்றாவது நாளில், சீனியர்களில் ஒருவர் அவர் முகத்தில் ஃபைல் ஒன்றி தூக்கி எரிந்து கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார். அத்துடன் படிப்பை தொடரவிடாமல் ஆக்கி விடுவேன் எனவும் எச்சரித்துள்ளார். இதனாலேயே பாயல் தத்வி கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளானார். இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தொல்லைகள்தான் அதிகமாகியிருக்கிறது. அத்துடன் சாதி பெயரை குறிப்பிட்டு இவர்களுக்கு எதுவும் தெரியாது. இவர் சாதி பெயரை பயன்படுத்திதான் மருத்துவ சீட் வாங்கியுள்ளார் எனவும் வசைபாடியுள்ளனர் என தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *