மும்பையில் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி தஷ்வந்துக்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல்; தாயை போல தந்தையை கொல்ல திட்டமிட்டதாகவும் தஷ்வந்த் வாக்குமூலம்….

மும்பையில் கைது செய்யப்பட்ட கொலை குற்றவாளி தஷ்வந்தை வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சச்சிதானந்தம் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த பிப்ரவரி மாதம் சிறுமி ஹாசினியை எரித்துகொன்ற தஷ்வந்த், நகைக்காக தாய் சரளாவைக் கொன்று விட்டு மும்பைக்குத் தப்பியோடினார். மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்தை சனிக்கிழமை இரவு விமானம் மூலம் சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர். குன்றத்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட தஷ்வந்திடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சிறுமி ஹாசினியை கொலை செய்ததால், பெற்றோர் தன்னை திட்டிக்கொண்டே இருந்ததாகவும், அதனால் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தஷ்வந்த் தெரிவித்துள்ளார். தாயை கொலை செய்துவிட்டு தந்தைக்காக காத்திருந்ததாகவும், ஆனால், அவர் வர நேரமானதால், வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணத்துடன் தப்பிச் சென்றதாகவும் கூறியுள்ளார். தஷ்வந்த்திடம் காவல்நிலையத்தில் வைத்து சுமார் 15 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர், தந்தை சேகர், மற்றும் உறவினர்கள் அழைத்து வரப்பட்டு அவர்கள் முன்னிலையில் வாக்குமூலம் பெறப்பட்டது. பின்னர் செங்கல்பட்டில் நீதிபதி சச்சிதானந்தம் முன்னிலையில் தஷ்வந்தை காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். தஷ்வந்தை வரும் 22 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரரவிட்டதையடுத்து தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *