முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவிடம் நீதிபதி ஆறுமுகசாமி தீவிர விசாரணை மேற்கொண்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் ஒவ்வொருவருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது. அதில் இதுவரை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு மருத்துவர் பாலாஜி, அக்குபஞ்சர் டாக்டர் சங்கர், முன்னாள் மருத்துவ கல்வி இயக்குனர் நிர்மலா, டீன் நாராயணபாபு, தி.மு.க. நிர்வாகி டாக்டர் சரவணன் உள்ளிட்ட பலர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன்ராவ் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரானார். தொடர்ந்து 4 மணி நேரத்துக்கும் மேலாக ராம் மோகன்ராவிடம் நடைபெற்ற விசாரணையில் நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் விளக்கம் அளித்தார்.

இதனிடையே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அப்போலோ மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை, தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கடந்த 20ம் தேதி வெளியிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சார்பில், சென்னை அண்ணாசதுக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில், வெற்றிவேல் மீது, 5 பிரிவுகளில் அண்ணா சதுக்கம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *