மீன் விற்கும் கல்லூரி மாணவியை அவமானப்படுத்துவதா? கேரள முதல்வர் கடும் கண்டனம்!

கேரளாவில் பகுதி நேரமாக மீன் விற்று வாழ்க்கையை நடத்தி வரும் கல்லூரி மாணவி ஹனனுக்கு கேரள முதல்வர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் தொடுபுழாவைச் சேர்ந்தவர் ஹனன் ஹமீது. (21) அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி (கெமிஸ்ட்ரி) இறுதியாண்டு படித்துவருகிறார். படுத்துக்கொண்டே மாலை நேரத்தில் மீன்விற்று குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரது வாழ்க்கை குறித்து கேரளாவின் ’மாத்ருபூமி’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டது. கடும் போராட்டத்துக்கு இடையே யாரிடமும் உதவி கேட்காமல், உழைத்து முன்னேறும் ஹனனின் கதையை படித்த பலருக்கு அவர் மீது இரக்கம் ஏற்பட்டது. சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் அவருக்கு உதவ முன் வந்தனர்.

இந்தக் கட்டுரை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. அதில் ஹனனின் தன்னம்பிக்கை குறித்து பாராட்டி பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது பொய் என்றும் பணம் பறிப்பதற்காக இவர் இப்படி செய்வதாகவும் சிலர் கிண்டலடித்து கருத்து பதிவிட்டிருந்தனர். ஹனன் தொடர்பாக வதந்திகளையும் பரப்பினர். இந்நிலையில் ஹனன் படிக்கும் கல்லூரி முதல்வரும், அவரது நண்பர்களும் ஹனன் கதை உண்மையானது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ஜே.அல்போன்ஸ், தனது முகநூல் பக்கத்தில், இச்சம்பவம் குறித்து உருக்கமாக பதிவிட்டிருந்தார். கிண்டல் செய்வதை மத்திய அமைச்சர் வன்மையாகக் கண்டித்தார்.

இந்த விவகாரம் குறித்து ஹனன், ‘எனக்கு உங்களின் எந்த உதவியும் வேண்டாம். என்னால் இயன்ற வேலையை செய்து என்னைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த செய்தி கேரள முதல்வர் பினராயில் விஜயனுக்குத் தெரிந்தது. அவர், ஹனனை கிண்டல் செய்தவர்களுக்கு கடும் கண்டனத்தை முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
‘ஹனனின் செயலை கண்டு பெருமை படவேண்டும். அவர் தன்னை மட்டுமல்ல, பல்வேறு வேலைகள் செய்து படித்துக்கொண்டே குடும்பத்தையும் காப்பாற்றுகிறார். அவருக்கு நாம் ஆதரவாக இருக்க வேண்டும். அவரது வாழ்க்கை கதையை கேட்டு பெருமையாக உணர்ந்தேன். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு அனைத்துவிதமான உதவிகளும் கிடைக்க உத்தரவிட்டுள்ளேன். அவரை கிண்டல் செய்வது கண்டனதுக்கு உரியது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன்’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *