மாணவி சோபியாவை உடனே விடுதலை செய்க! தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்

விமானத்திலிருந்து இறங்கும் போது மாணவி சோபியா என்பவர் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களைப் பார்த்து ‘பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என்று முழக்கமிட்டுள்ளார். அதற்காக அவரைக் கைது செய்து சிறைப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ள மாணவி சோபியாவை உடனே விடுதலை செய்ய வேண்டுமெனத் தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம். முழக்கமிட்டதற்காக ஒரு மாணவியை ஆபாசமான வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தி , கொலை மிரட்டல் விடுத்துள்ள தமிழக பாஜக தலைவரின் செயல் அக்கட்சியின் பாசிச போக்குக்கு அடையாளமாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் தனது பெற்றோர்களுடன் பயணம் செய்த கனடா நாட்டில் ஆராய்ச்சி மாணவியாக இருக்கும் சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும் போது  தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக ‘ பாசிச பாஜக ஆட்சி ஒழிக!’ என்று முழக்கமிட்டுள்ளார்.  ஆளும் கட்சி ஒன்றை எதிர்த்து முழக்கமிடுவது ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட வடிவம்தான். பாஜகவினரும் அவர்களது ஆதரவு உதிரி இயக்கங்களைச் சார்ந்தவர்களும் எதிர்ப்பை தெரிவிப்பதற்கு தலைவர்கள் மீது காலணிகளை வீசியுள்ளனர், முகத்தில் கறுப்புச் சாயம் பூசி அவமானப்படுத்தியுள்ளனர். சுவாமி அக்னிவேஷ் போன்ற 80 வயது முதியவரைக் கூட அடித்து சட்டையைக் கிழித்துள்ளனர். தங்கள் கட்சியைச் சார்ந்த அமைச்சர் என்று கூட பார்க்காமல் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களை சமூக வலைதளங்களில் அவதூறு செய்துள்ளனர். அத்தகைய வன்முறையான வழிமுறை எதையும்  மாணவி சோபியா பின்பற்றவில்லை. தூத்துக்குடியில் அப்பாவி பொதுமக்களின் உயிரைக்குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்படுவதைக் கண்டு அந்த ஊரைச் சேர்ந்த ஒரு மாணவி தனது உள்ளக்குமுறலை ஜனநாயக வழிமுறையில் வெளிப்படுத்தியிருப்பது எந்த விதத்தில் சட்டவிரோதமாகும்? ‘ஒழிக!’ என்று முழக்கமிடுவது தண்டனைக்குரிய குற்றமென்றால் ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானவர்களை சிறையில் அடைக்க வேண்டியிருக்கும். இந்த அடிப்படை அரசியல் புரிதல் கூட இல்லாமல் மத்தியில் ஆட்சி அதிகாரம் இருக்கும் மமதையில், தமிழகத்தில் தமக்கு இசைவான அரசு இருக்கிறது என்ற இறுமாப்பில்,  தனது மகளைப் போன்ற ஒரு பெண் என்றும் பாராமல் சோபியாவை அவமானப்படுத்தியும், கொலைமிரட்டல் விடுத்தும், பொய் புகார்களைச் சொல்லியும் கைது செய்ய வைத்திருப்பது ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ள ஒருவருக்குத் தகுதியான செயல் அல்ல.
மாணவி சோபியா மீது போடப்பட்டுள்ள சட்டபிரிவுகளைப் பார்த்தாலே இந்தப் புகார் உண்மைக்கு மாறானது என்பதை நீதிமன்றம் புரிந்துகொண்டிருக்க முடியும். அப்படி இருந்தும் கீழமை நீதிமன்றம் சோபியாவை நீதிமன்ற காவலில் வைக்கச்சொன்னது அதிர்ச்சியளிக்கிறது. இது உச்சநீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு முரணாக உள்ளது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் தானே முன்வந்து இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *