பாஜகவிற்கு எதிராக கோஷம் எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா கைது : ஏ.கே.கரீம் கண்டனம்

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு பயணம் செய்த பயணிகள் விமானத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பயணம் செய்த போது, அதே விமானத்தில் பயணம் செய்துள்ளார் கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் தூத்துக்குடியை சேர்ந்த மாணவியான டாக்டர் ஐயாப்பிள்ளை என்பவரின் மகள் சோபியா. அப்போது மாணவி சோபியா தமிழக நலன்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் அவற்றை எதிர்ப்பவர்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் அடக்குமுறைகள் போன்றவற்றை எதிர்த்து பாசிச பாஜக அரசு ஒழிக என கோசம் எழுப்பியுள்ளார். இதையடுத்து விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகளை வரவழைத்து மாணவி சோபியா மற்றும் அவரது கும்பத்தினரை மிரட்டியுள்ளார் தமிழக பாஜக தலைவர்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக மக்கள் நலன்களுக்கு எதிராக மத்திய பாஜக அரசு மேற்கொண்டுவரும் மக்கள் விரோத பாசிச அரசை மாணவி சோபியா விமர்சித்ததில் எந்த தவறும் இல்லை. வாழ்க என்று சொல்வதற்கு அவர்களுக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதேப்போல் ஒழிக என்று எதிர்கருத்து சொல்வதற்கும் ஜனநாயக கருத்துரிமை உள்ளது.

பாஜக அரசு மீதான மக்கள் கோபத்தின் வெளிப்பாட்டை மாணவி சோபியா வெளிப்படுத்தியதை புரிந்துகொள்ளாத தமிழக பாஜக தலைவர், தங்களது வழக்கமான, எதிர்கருத்து கூறுபவர்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கும் போக்கை கையாண்டுள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. பலரும் ரகசியமாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்து வந்த கருத்தையே மாணவி சோபியாவும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் தனது கருத்தை சுதந்திரமாக வெளிப்படுத்த உரிமை உள்ள நிலையில், அங்கு சட்ட ஒழுங்கு பாதிக்காத வகையில் மாணவி சோபியா தனது கருத்தை முழக்கமாக வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், மாணவி சோபியாவை கைது செய்து சிறையிலடைத்துள்ளது தமிழக காவல்துறை.

அதேவேளையில் தனது கட்சி தொண்டர்களை வரவழைத்து மாணவி சோபியா மற்றும் குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டவைத்து மிரட்டல் விடுத்ததாக மாணவின் தந்தை ஐயாபிள்ளை அளித்த புகாரின் அடிப்படையில் பாஜக தலைவர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இந்த பாரபட்ச போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

ஆகவே, மாணவி சோபியாவின் தந்தை அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுப்பதோடு, உடனடியாக மாணவியை விடுதலை வேண்டும் என எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியல் அமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரமானது தாங்கள் வகுக்கும் வரையறைக்குள் தான் இருக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் நினைத்தால், மக்கள் அத்தகைய அடக்குமுறைக்கு சம்மட்டி அடி கொடுப்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *