மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான்: நிர்மலா தேவி

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றது உண்மைதான் என உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக சிபிசிஐடி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற புகாரில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு பதிலாக பெண் டி.ஐ.ஜி. தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த உயர்நீதிமன்றம் விசாரணையின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

அதன்படி விசாரணை அதிகாரியான சிபிசிஐடி கூடுதல் கண்காணிப்பாளர் லாவண்யா, வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் நிர்மலா தேவி, முருகன் மற்றும் கருப்பசாமியை காவலில் எடுத்து ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முருகன் மற்றும் கருப்பசாமிக்காகவே மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக நிர்மலா தேவி ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவிகளிடம் நிர்மலா தேவி கைபேசி வாயிலாக பேசிய உரையாடல் பதிவுகள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை 160 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது மூவரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் இருந்தும் சிம்கார்டு, மெமரி கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டு தடய அறிவியல்துறை ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிர்மலா தேவிக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்றும் சிபிசிஐடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *