“மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை” ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

மனிதாபிமானம் இன்னும் அழிந்து விடவில்லை என்பதற்கு இளைஞர்கள் மேற்கொண்ட ஒரு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காயலார்மேடு கிராமத்தில் தெரு நாய்களுக்குள் ஏற்பட்ட சண்டையால், அங்குள்ள தரைமட்டமான விவசாய கிணற்றில் தெரு நாய் ஒன்று தவறி விழுந்தது. அந்த கிணற்றில் பாம்புகள் இருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் நாயை காப்பாற்றாமல் விட்டு விட்டனர்.

3 நாட்களுக்கு பிறகு, தரிசாக இருக்கும் நிலத்தில் அப்பகுதி இளைஞர்கள் சிலர், கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த போது, நாய் ஒன்றின் ஈன குரல் கேட்டுள்ளது. அந்த இளைஞர்கள் தேடி பார்த்தபோது, அங்குள்ள விவசாய கிணறு ஒன்றில் நாய் ஒன்று குரைத்து கொண்டிருந்தது. இதனை கண்ட அவர்கள், அந்த நாய்க்கு பிஸ்கட், பன் போன்றவற்றை கொடுத்துள்ளனர்.

நாயை மீட்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கிய போது, 30 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் 5 நல்ல பாம்புகள் இருப்பதை அறிந்து பின் வாங்கியுள்ளனர். ஆனால், பாம்புகளிலினால் நாய்க்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்க்க, யோசித்தபோது தான், அவர்களுக்கு தீயணைப்பு துறையினரின் ஞாபகம் வந்துள்ளது.

இதனையடுத்து, கும்மிடிப்பூண்டி சிப்காட் தீயணைப்பு துறையினருக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். நீண்ட ஏணி ஒன்றின் உதவியுடன் தண்ணீர் இல்லாத அந்த கிணற்றில் அவர்கள் இறங்கியபோது தீயணைப்பு வீரர்களை கண்ட நாய், எந்தவித எதிர்ப்பும் இன்றி அவர்களிடம் வந்தது. அதனை பிடித்த வீரர்கள், பிஸ்கட் கொடுத்து ஆறுதல் அளித்து அந்த நாயை தூக்கி கொண்டு ஏணிsயில் ஏறி வெளியே விட்டனர். தம்மை காப்பாற்றிய வீரர்களை அந்த நாய் நன்றியுடன் பார்த்து விட்டு ஓடியது.

3 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அந்த நாய் அங்குள்ள கால்வாய் ஒன்றில் தேங்கியிருந்த தண்ணீரை குடித்து தாகம் தீர்த்தது. பின் காப்பாற்றிய அனைவரையும் நன்றியோடு பார்த்த அந்த காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய வைத்தது. தெரு நாய் தானே என்று அலட்சியம் காட்டாமல் அதனையும் உயிர் என நினைத்து அந்த கிராம இளைஞர்கள் காப்பாற்றியது, மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதையே நிரூபித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *