பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழக அரசு; 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன் அடையும் என அறிவிப்பு…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி குடும்ப அட்டை உடைய குடும்பங்கள், காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள், முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பினால் 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன் அடைவார்கள் என்றும், இதன் மூலம் தமிழக அரசுக்கு சுமார் 210 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆயிரத்து 590 ரூபாயும், பொது ரகத்திற்கு ஆயிரத்து 550 ரூபாயும் விலை நிர்ணயித்துள்ளதாக கூறியுள்ளார். சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், பொது ரகத்திற்கு 50 ரூபாயும் ஊக்கத் தொகை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் படி சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ஆயிரத்து 660 ரூபாயும், பொது ரகத்திற்கு ஆயிரத்து 600 ரூபாயும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தமிழகத்தில் ஆயிரத்து 564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கவும், 20 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால் கூடுதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அறிவுறுத்தியுள்ளதாகவும், சென்னை, நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகளுக்கு தேவையான இடங்களில் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

* ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய்

* அரிசி குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்பங்கள், முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு

* 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன் பெறுவர்

* பொங்கல் பரிசு தொகுப்பால் தமிழக அரசுக்கு சுமார் 210 கோடி ரூபாய் செலவு

* சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ஆயிரத்து 590 ரூபாயும், பொது ரகத்திற்கு ஆயிரத்து 550 ரூபாயும் நிர்ணயம் – மத்திய அரசு

* சன்ன ரக நெல்லுக்கு 70 ரூபாயும், பொது ரகத்திற்கு 50 ரூபாயும் ஊக்கத் தொகை – தமிழக அரசு

* சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு ஆயிரத்து 660 ரூபாயும், பொது ரகத்திற்கு ஆயிரத்து 600 ரூபாயும் விலை நிர்ணயம் – தமிழக அரசு

* ஆயிரத்து 564 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவு – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

* 20 லட்சம் மெட்ரிக் டன் நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டம்

* கூடுதலாக புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அறிவுறுத்தல் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *