பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் விழுந்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பள்ளியின் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செஞ்சியில் உள்ள ராசா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. கட்டிடப் பணிகளுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீர் தொட்டியில் நீர் சேகரிக்கப்பட்டுள்ளது. 10 அடி ஆளமுள்ள தொட்டியில், ஆறரை அடிக்கு நீர் தேக்கப்பட்டுள்ளது.

அந்தப் பள்ளியில் கழிவறை வசதி இல்லாததால் இன்று காலை பள்ளிக்கு சென்ற மேல் அருங்கோணத்தைச் சேர்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிவராமன் என்ற மாணவன், மலம் கழித்து விட்டு கால் கழுவதற்காக தொட்டிக்குச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக தொட்டியில் விழுந்த சிவராமன் நீச்சல் தெரியாமல் திணறியுள்ளான். காப்பாற்றுவதற்கு யாரும் இல்லாததால், நீரில் மூழ்கி பரிதாபமாக சிவராமன் உயிரிழந்தான்.

தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.

இதனிடையே மாணவன் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகம் மற்றும் கட்டிட ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நீர் தேக்கி வைத்திருந்த கழிவுநீர் தொட்டியை மூடி இருந்தால் உயிரிழப்பை தவிர்த்து இருக்கலாம் என்றும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *