பத்மவிபூசன் விருது வென்ற இசைஞானி இளையராஜாவுக்கு குவிகிறது வாழ்த்து.. தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோர் பாராட்டு;

இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷணுக்கு தேர்வாகி உள்ள இசை ஞானி இளையராஜாவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தியாவின் இரண்டாவது பெரிய விருதான பத்ம விபூஷண் விருது இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வாழத்து தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு இசை ஞானி இளையராஜா பெருமை சேர்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதே போன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனும் இசை ஞானி இளையராஜாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜா மக்களுக்கு பெருமையை சேர்த்துள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இசை ஞானி இளைய ராஜாவுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த் தொலைபேசியிலும் கமல்ஹாசன், விஷால், சித்தார்த், இயக்குநர் சுசீந்திரன் உள்ளிட்ட பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ராஜாவால் பத்ம விபூஷண் விருதுக்கு கௌரவம் கிடைத்துள்ளது என்று இளையராஜாவுக்கு பிரபல நடிகர் சிவக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்துவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் பத்ம விருதுகள் பெறும் 85 இந்திய ஆளுமைகளுக்கும் என் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *