பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, நேற்றுடன் ஒராண்டு நிறைவடைந்தது. இந்நாளை, தேசிய பொருளாதார பேரிடர் நாளாக அறிவித்து, சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன கூட்டம் நடைபெற்றது. சென்னை வேப்பேரி பெரியார் திடலில், எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சௌந்தரராஜன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவுரையாற்றிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், பணமதிப்பு நீக்கம் காரணமாக அப்பாவி பொதுமக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டதாகவும், 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும் குற்றம்சாட்டினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக போராடிய எதிர்க்கட்சிகளிடம் முறையாக, நேர்முகமாக பதில் சொல்ல முடியாத மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் என்று விமர்சனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

பணமதிப்பு நீக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், பொதுமக்கள் பற்றி எவ்வித கவலையும் இல்லாமல், நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றி வருகிறார் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *