நீதிமன்றத்தை அவமதித்த எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் – உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சுதா

தமிழக அரசியலில் சர்ச்சை கருத்துகளை தொடர்ந்து பேசி வருபவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. திரிபுராவில் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து லெனின் சிலை அகற்றப்பட்டபோது அதை சுட்டிக்காட்டி தமிழகத்திலும் அதை போன்று பெரியார் சிலைகள் அகற்றப்படும் என சமூக வளதலத்தில் பதிவிட்டு சர்ச்சைக்குள்ளானார்.

பின்னர் அந்த பதிவை அழித்துவிட்டு தான் அப்படிப் பதிவிடவில்லை தனது அட்மின் தான் தன் அனுமதியின்றி பதிவிட்டார் என்று பின்வாங்கி கொண்டார். எச். ராஜாவின் சர்ச்சை பேச்சை காரணமாக காட்டி அவரது மனநிலையை பரிசோதிக்க வேண்டும் எனவும் கடந்த வழக்கு தொடரப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு உயர் நீதிமன்றம் மார்ச் மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டைமாவட்டம் திருமயம் அருகே மெய்யபுரத்தில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் தடையை மீறி செல்ல முயன்ற எச்.ராஜா போலீஸார் தடுத்தனர். அப்போது அவர்களிடம் வாக்குவாதம் செய்த எச். ராஜா உயர் நீதிமன்றதையும் காவல்துறையும் குறித்து மிகவும் கடுமையான சொற்களால் அவதூறாகப் பேசினார். இதனால் அவரது சர்ச்சைப் பேச்சு தமிழகம் முழுவதும் பரபரப்பானது.

நீதிமன்றத்தை அவமதித்த எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும், உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்யவேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது.

இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ராஜசேகரன், ஆர்.சுதா, கனகராஜ், ராஜாமுகமது ஆகியோர் நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், கல்யாணசுந்தரம் அமர்வு முன் முறையிட்டு சூமோட்டோ வழக்கு எடுக்கும்படி முறையீடு செய்தனர். ஆனால் அதற்கு மறுத்த நீதிபதிகள் அமர்வு அவமதிப்பு வழக்காக தாக்கல் செய்தால் விசாரிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்நிலையில் நீதிபதிகள் சிடி செல்வம், நிர்மல் குமார் அமர்வு எச்.ராஜாவின் பேச்சு குறித்து தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. தனது அவதூறுப் பேச்சு குறித்து எச்.ராஜா 4 வாரத்திற்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *