தமிழக வெள்ள நிவாரணப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் ; தினத்தந்தி பவளவிழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி உறுதி….

தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்ய, மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று, தினத்தந்தி பவளவிழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில், ‘தினத்தந்தி’யின் பவள விழா, வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் நரேந்திரமோடிக்கு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலங்களவை உறுப்பினர் இல.கணேசன், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் ஆகியோர் வரவேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி, மெரினா கடற்கரை அருகேயுள்ள ஐ.என்.எஸ். கடற்படை தளத்தில் வந்து இறங்கினார். அங்கிருந்து சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்துக்கு வந்த பிரதமர் மோடி, ‘தினத்தந்தி’ பவள விழாவில் பங்கேற்றார். விழாவில் அனைவரையும் வரவேற்று ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார். இதையடுத்து, தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்ட பிரதமர் மோடி, சி.பா.ஆதித்தனார் விருதுகள் மற்றும் சாதனையாளர் விருதினை வழங்கி உரையாற்றினார்.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, முதலில் அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், அஞ்சல் துறையில் ‘தந்தி’ சேவை காணாமல் போன நிலையில், 75 ஆண்டுகளை கடந்து செய்திகளை தந்தியாக ‘தினத்தந்தி’ கொடுத்து வருவதாக புகழாரம் சூட்டினார். ஊடகங்களின் பணிகள் குறித்து பேசிய மோடி, ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றியும் இருக்க வேண்டும் எனவும், ஊடகங்கள் நம்பத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். மேலும், தமிழக வெள்ள நிவாரணப் பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழு உதவி செய்யும் எனவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

தினத்தந்தி பவளவிழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிகைத் துறை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கிக்கொண்டிருக்கிறது எனவும், நாட்டில் ஜனநாயகம் தழைத்தோங்க அரசாங்கமும், பத்திரிகைத் துறையும் வண்டியின் இரு சக்கரங்கள்போல இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

தினத்தந்தி பவளவிழாவில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டார். அவரை, ‘தினத்தந்தி’ இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் வரவேற்றார்.
இதேபோல், தினத்தந்தி பவளவிழாவில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *