தமிழக அரசு கோரிக்கைகளை ஏற்கும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடருமென போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு; போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் கடும் அவதி…

ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்று தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை குரோம்பேட்டையில் போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடிப்படை ஊதியம், தர ஊதியத்துடன் 2.57 சதவிகிதம் ஊதியம் வழங்க வேண்டும் என்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கோரிக்கை முன்வைத்தன. முதலில் 2.40% மட்டுமே தர முடியும் என்று தெரிவித்த அரசு பின்னர் 2.44% மட்டுமே தர முடியும் என்று கூறியதால் அதிருப்தியடைந்த தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். அமைச்சருடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிஐடியூ தொழிற்சங்க செயலாளர் சவுந்தரராஜன், அரசு அறிவித்துள்ள 2.44 சதவிகித ஊதிய உயர்வு என்பதை எந்த காலத்திலும் ஏற்கவே முடியாது என்றும், கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை வேலைநிறுத்தம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிற்சங்கத்தினரின் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். சென்னையில் பல இடங்களில் பேருந்துகளை நிறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தாம்பரம், பூந்தமல்லி, திருவான்மியூர், கோயம்பேடு உட்பட பல இடங்களில் பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

கரூரில் பேருந்துகள் இயங்காத நிலையில், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் வேலைநிறுத்தத்தால், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் முடங்கினர்.

இதேபோல், விழுப்புரம், காஞ்சிபுரம், சிவகங்கை, ஈரோடு, சேலம் தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் சென்னை புறநகர் ரயில்களில் கூட்டம் அலைமோதியது. சென்னையில் பல்வேறு இடங்களில் ஆட்டோக்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில் விலை அதிகமாக வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர்.

பேருந்துகள் இயங்காததால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மற்றும் வியாபாரிகள், அலுவலக ஊழியர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனால் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் உடனான பேச்சுவார்த்தையில் அரசு விரைவில் சமூக முடிவு எட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *