தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் அருகே விளம்பரப் பலகைகள் வைக்க கூடாது ; சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவு….

தமிழகம் முழுவதும் போக்குவரத்து சிக்னல்கள் அருகே விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கோவை நுகர்வோர் அமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கில், போக்குவரத்து சிக்னல்களில் சாலை விதிகளுக்குப் புறம்பாக விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டிருந்தது. அதில் ஒளிரும் விளம்பர விளக்குகள் பொருத்தப்படுவதால், வாகன ஓட்டிகளின் கவனம் திசை திரும்பி விபத்து ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், கவனத்தை திசை திருப்பும் வகையிலும் சாலைகள் மற்றும் சந்திப்புகளில் உள்ள சிக்னல்கள் அருகே வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை உடனடியாக அகற்றுவதுடன், புதிதாக விளம்பரப் பலகைகள் வைக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் அருகே விளம்பரங்கள் வைக்க தடை விதித்தது. மேலும், இதுவரை விளம்பரம் வைக்க அனுமதி கொடுத்திருந்தால் அவற்றின் அனுமதிகாலம் முடிந்த பின்னர் அவற்றை அகற்ற வேண்டும், மீண்டும் அனுமதியை புதுப்பிக்க கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், சிக்னலுக்கு இடையூறாக விளம்பர பலகைகள் வைக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *