தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரிப்பு… சேலம் மாவட்டம் ஓமலூரில் மட்டும் 26 பேர் பலியானதால் மக்களிடையே பீதி

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் நாள்தோறும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரவிசந்திரன். இவரது மகள் நிவாஷினி கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து ஓமலூர் அரசு மருத்துவமனையில் நிவாஷினிக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நிவாஷினிக்கு காய்ச்சல் அதிகரித்ததால் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட சில நாட்களில் நிவாஷினி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அக்கிராமத்தில் இதுவரை 5பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சேலம் மாவட்டம்,ஓமலூர் வட்டார கிராமங்களில் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகளால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஓமலூர் அருகே அமரகுந்தி கிராமத்தைச் சேர்ந்த வைரவேலுவின் மகன் சிவகார்த்திக் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தார். ஓமலூர் பகுதியில் மட்டும் 26 பேர் காய்ச்சல் காரணமாக இறந்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையை சேர்ந்த முத்துமாரி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கடந்த 8 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் முத்துமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம் கல்லல் இந்திரா நகரை சேர்ந்த பள்ளி மாணவர் மகேஸ்வரனுக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியானதை அடுத்து தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல் சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே மாலைகண்டான் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகள் காவியா ,டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 3பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 ற்கும் மேற்பட்டோர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *