தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் பல மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், கோவை, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், சேலம், உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வேகமாக பரவிவருகிறது.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தொகுதி, கம்பம்பட்டு கிராமத்தை சேர்ந்த மணிகண்டன், டெங்கு காய்ச்சலால் பலியானார். மணிகண்டனின் மரணத்துக்கு, அரசு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் எனக்கூறி, அவரது உறவினர்கள், திருவண்ணாமலை – திருக்கோவிலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே, உலகம்பட்டி கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி செர்லின் பவிஷா, கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது, உறுதிசெய்யப்பட்டது. மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி செர்லின் பவிஷா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், திண்டுக்கல் மாவட்டம் குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவன் ஆல்பர்ட்டும், டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே பொய்குணம் கிராமத்தை சேர்ந்த கன்னியம்மாள், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கன்னியம்மாள், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேபோல், கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த மணவாசி கிராமத்தில், 5 வயது குழந்தை பூஜாவுக்கு, டெங்கு காய்ச்சல் இருப்பது, கண்டுபிடிக்கப்பட்டது.

கரூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என கூறப்பட்டதால், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பூஜா, சிகிச்சை பலனளிக்காமல் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், பூஜாவின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையே, டெங்குவுக்கு சிகிச்சை பெற அரசு மருத்துவமனையில் மருத்துவ காப்பீடு உள்ளதா என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் டெங்குவை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து வரும் 13ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *