ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி எனக்கு எதுவும் தெரியாது; ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் பேட்டி…

ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய சசிகலாவின் சகோதரரான திவாகரன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உயிர் 2 ஆயிரத்து 16ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி அன்று மாலை 5. 15 மணிக்கு பிரிந்ததாகவும், அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பல்லோ மருத்துவமனை குழுமத்துக்கு சொந்தமான மருத்துமனைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்ட பின்னர், மறுநாள் 5ஆம் தேதி தாமதமாக அவரது மரண செய்தி அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் சுந்தரகோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், தமது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாக தற்போது தெரிவித்துள்ளார். டிசம்பர் 4ஆம் தேதி மாலை ஜெயலலிதா கிளினிக்கல் ரீதியில் மரணமடைந்தார் என்றும் பயாலஜிக்கல் மரணம் ஏற்படாமல் தடுக்க உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் திவாகரன் கூறியுள்ளார்.

இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் தொடர்பாக திவாகரன் கூறிய கருத்து பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்றும் திவாகரன் கருத்து பற்றி அப்பல்லோ நிர்வாகம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் டிசம்பர் 4 ஆம் தேதி ஜெயலலிதாவுக்கு இருதய செயலிழப்பு ஏற்பட்டு எக்மோ கருவி பொருத்தப்பட்டது என்றும் டிட்வி தினகரன் கூறினார்.

இதனிடையே ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று அப்பலோ மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. 2 ஆயிரத்து 16 டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா மரணத்தை அறிவித்ததில் மருத்துவ நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்றும் டிசம்பர் 5ஆம் தேதி தான் ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்றும் அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *