சேலத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டப்படும் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் தமிழக அரசின் சார்பில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சேலம் மாவட்டத்தில் 7 இடங்களில் புதிதாக தடுப்பணைகள் கட்டப்படும் எனவும், எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு சேலத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழகத்தில் தீயசக்திகளை அழிக்க மக்கள் பெற்றுள்ள ஒரே ஆயுதம் அதிமுக தான் என்று தெரிவித்தார்.

முன்னதாக எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர். புகைப்படக் கண்காட்சி, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் காய்கறிகள் மற்றும் பழங்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *