சென்னை, திருவள்ளூர் உட்பட 9 கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை ; சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை…..

தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, விழுப்புரம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பெரும்பாலான இடங்களில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முதலே பெய்து வரும் மழையால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை மாவட்டத்தில் உள்ள தனியார் மற்றும் அரசுப் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும், நேற்று ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே வகுப்புக்களை முடித்து கொள்ளுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிலையில், மழை இரு தினங்களுக்கு தொடரும் என்ற அறிவிப்பால் முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடுமாறு ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, விழுப்புரம் ஆகிய மாவட்ட பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடலூர், குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோயில், பண்ருட்டி, குமராட்சி, புவனகிரி, அண்ணாகிராமம், கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை ஆகிய 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *