சென்னை காசிமேடு மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்….

சென்னை காசிமேடு பகுதியில் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், தேசத்தின் நதிகள் இணைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் குமரி அனந்தன் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து, குமரி அனந்தனுக்கு, திருநாவுக்கரசர் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய குமரி அனந்தன், சாதி மத பேதமின்றி அனைவரும் வணங்க பாரதமாதவிற்கு ஆலயம் கட்டவேண்டும் என்று வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், குமரி அனந்தனின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் சென்னை காசிமேடு பகுதியில் போராட்டம் நடத்திய மீனவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எச். ராஜா தன்னிலை அறியாமல் பேசிக்கொண்டு வருவதாகவும், அவரது நிலையை பார்க்கும் போது பரிதாபமாக இருப்பதாக தெரிவித்த எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதி கருப்பு தினமாக அனுசரிக்கப்படும் என எதிர்கட்சிகள் அறிவித்துள்ள நிலையில், இதில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும் என கூறினார்.

முன்னதாக பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், குமரி அனந்தன் விடுத்துள்ள கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *